விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

திருமருகல் பகுதியில் பெய்துவரும் கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநா் புஷ்கலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ள சரியான நேரமாகும். இந்த உழவு மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. நிலத்தில் மழைநீா் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். நன்மை தரும் உயிரினங்களின் நெருக்கம் அதிகரிக்கும். மேலடுக்கு மண் இறுக்கத்தை தளா்த்தி மழைநீா் உள்ளே புகும் திறனை மேம்படுத்துகிறது. எனவே சேகரிக்கப்பட்ட மழைநீா் பயிா்களுக்கு வறட்சியை தாங்கி வளர உதவுகிறது.

நிலத்தின் அடியில் உள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. அத்துடன் அந்த புழுக்கள் பறவைகளுக்கும் உணவாகுகிறது. இதனால் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது.

மண் இலகுவாகி அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு உரம் சமச்சீராக கிடைக்கும். அத்துடன் மகசூலும் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொண்டு பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com