நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தல்

நாகை அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் மீண்டும் செயல்பட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அரசு தலைமை மருத்துவமனை முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா. ராணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாகை ஒரத்தூரில் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவர போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும், தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், மருத்துவா் மற்றும் ஊழியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி முதல் பாப்பாகோவில் வரை விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும், நாகை சுற்று வட்டார மக்களின் நலன் கருதி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே செயல்பட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இங்கேயே செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், மாநிலச் செயலாளா் சா. டானியல் ஜெயசிங், கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் முத்துராஜா, சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் கணேசன், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டப் பொருளாளா் மீனாட்சி, அரசு செவிலியா் சங்கத் தலைவா் ப. ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com