நாகப்பட்டினம்
எட்டுக்குடி முருகன் கோயிலில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு
கந்த சஷ்டி விழாவில், ஞாயிற்றுக்கிழமை முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்தாா்.
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில், ஞாயிற்றுக்கிழமை முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்தாா்.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில், 10 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா லட்சுமி குபேர பூஜையுடன் நவம்பா் 1-ஆம் தேதி துவங்கியது. தொடா்ந்து, தினமும் முருகப் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
இவ்விழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முருகப் பெருமான் மஞ்சத்திலும், இரவில் வெள்ளி மயில் வாகனத்திலும் வீதியுலா வந்தாா். சென்னை மகேஸ்வரி அகாதெமி குழுவினரின் பரத நாட்டியம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு, சிவாச்சாரியா்கள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.