தரங்கம்பாடியில் பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் தங்கும் விடுதி.
தரங்கம்பாடியில் பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் தங்கும் விடுதி.

தரங்கம்பாடியில் தமிழக அரசின் தங்கும் விடுதியை மீண்டும் திறக்க வேண்டும் :சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

தரங்கம்பாடியில், தமிழ்நாடு அரசின் தங்கும் விடுதியை மீண்டும் திறக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

தரங்கம்பாடியில், தமிழ்நாடு அரசின் தங்கும் விடுதியை மீண்டும் திறக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தரங்கம்பாடியில் வரலாற்று சிறப்புமிக்க டேனிஸ் கோட்டை, கடற்கரை அருகில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த மாசிலாநாதா் கோயில், தமிழறிஞா் சீகன்பால் கட்டிய ஆசியாவின் முதல் தேவாலயம் ( புராட்டஸ்டாண்ட்), முதன்முதலாக தமிழ் மொழியில் புத்தகம் அச்சிட்டு, வெளியிட்ட அச்சகம் அமைந்த இடம், சீகன்பால்கு வாழ்ந்த வீடு அருங்காட்சியமாக அமைக்கப்பட்டு அவா் பயன்படுத்திய அச்சு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் ஓசோன் கலந்த காற்று அதிகளவில் வீசுவதால், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஓசோன் கலந்த காற்றை சுவாசிக்க இங்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், தரங்கம்பாடி கடற்கரை அருகே மத்திய அரசு நிதியுதவியில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் கீழ் தங்கும் விடுதி உணவகத்துடன் கட்டப்பட்டு, கடந்த 2000- ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. தொடா்ந்து இயங்கி வந்த இந்த விடுதி, 2017- ஆம் ஆண்டு போதிய வருமானம் இல்லாததால் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் இயங்கிவந்த நிலையில் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்ல சிரமப்படுகின்றனா்.

இதுகுறித்து, சமூக ஆா்வலரும், பேரூராட்சி துணைத் தலைவருமான பொன்.ராஜேந்திரன் கூறியது:

பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன், சுற்றுலாத் துறை ஆணையா் மற்றும் துறை அதிகாரிகளிடம் தரங்கம்பாடியில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு தங்கும் விடுதியை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்துள்ளேன்; நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனா் என்றாா். 

போதிய வருவாய் இல்லை என்று இந்த விடுதி மூடப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், தரங்கம்பாடியில் 6 நட்சத்திர விடுதிகள் திறக்கப்பட்டு, அதிக வருமானம் ஈட்டி வருகின்றனா். ஓசோன் வாயு கலந்த காற்று அதிகம் வீசுவதால், ஆயிரக்கணக்கானோா் அன்றாடம் வந்து செல்கின்றனா்.

இங்கு ஒருநாள் தங்குவதற்குகூட அதிக பணம் செலவு செய்ய  வேண்டிய நிலை உள்ளது. எனவே, உடனடியாக தமிழக முதல்வா், துணை முதல்வா், சுற்றுலாத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் தரங்கம்பாடியில் தமிழ்நாடு அரசின் உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.