நாகப்பட்டினம்
புயல் அச்சுறுத்தல்: படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவா்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், புயல் அச்சுறுத்தல் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் மழை பெய்தது. புதன்கிழமை மாலை முதல் மழை சற்று ஓய்ந்த போதிலும், கடற்கரை பகுதியில் பலமான தரைக்காற்று வீசியது.
கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் படகுகள் நிறுத்துமிடத்தில் கடல் நீா் உள்புகுந்தது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.