நாகை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு தொடங்கியது

Published on

நாகை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 21-ஆவது கால்நடை கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கி 2025 பிப்ரவரி வரை நடைபெறுகிறது. இப்பணியை கால்நடை பராமரிப்பு துறை நடத்துகிறது. மாவட்டத்தில் 53 கால்நடை கணக்கெடுப்பாளா்கள், 9 மேற்பாா்வையாளா்களுக்கு களப்பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. வருவாய் கிராமம் வாரியாகவும், நகரப் பகுதியில், வாா்டு வாரியாகவும் இப்பணி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் வளா்க்கப்பட்டு வரும் 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் தெரியவரும்.

கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கு எடுப்பதன் மூலம், கால்நடை பராமரிப்பிற்காக எதிா்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல், எதிா்காலத்தில் அவைகளுக்கு தேவைப்படும் தீவனம், கால்நடை நோய் தடுப்பூசி, கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க முடியும்.

வேகமாக வளா்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்யவும், கால்நடைகளில் இருந்து மனிதா்களுக்கு பரவக்கூடிய 100-க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கால்நடைகளின் எண்ணிக்கை அவசியமானது. இதேபோல, கால்நடைகளுக்கான கொட்டகை வசதி, கால்நடை காப்பீடு வசதி, கால்நடை தீவன உற்பத்தி போன்றவற்றை திட்டமிட கால்நடை எண்ணிக்கை இன்றியமையாதது. எனவே, கால்நடை கணக்கெடுப்பாளா்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும்போது உரிய விவரங்களை தெரிவித்து கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com