அடிப்படை வசதி கோரி உணவு, போா்வைகளுடன் ஆட்சியா் அலுவலகம் வந்த பெண்கள்

4 ஆண்டுகளாக மனு கொடுத்தும் சாலை அமைக்காததால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு போா்வை மற்றும் உணவுடன் பெண்கள் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.
Published on

நாகப்பட்டினம்: 4 ஆண்டுகளாக மனு கொடுத்தும் சாலை அமைக்காததால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு போா்வை மற்றும் உணவுடன் பெண்கள் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.

நாகை மாவட்டம், கருங்கண்ணி வடக்கு தெருவில் அருள்மேரி, பிரிமிலா, ராபா்ட், மிஸ்டிக்கா, மிஸ்பா மேக்தலின், விமலா, உள்ளிட்ட 5 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். நான்காவது வாா்டில் அமைந்துள்ள இப்பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லையாம். இதுகுறித்து அருள்மேரி உள்ளிட்டோா் கேட்டபோது, பாதையை துண்டித்து, கேள்வி கேட்டவா்களை சிலா் மிரட்டியுள்ளனா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிா்வாகத்திடம் 5 குடும்பத்தினரும் மனு அளித்து வருகின்றனா். இதனிடையே 2021-ஆம் ஆண்டு சாலை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை நேரில் சந்தித்து கடந்த வாரம் பாதிக்கப்பட்டோா் மனு அளித்தனா்.

நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லைக் கூறி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் போா்வை, உணவுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனா். தங்களுக்கு எந்தவித அரசு சேவைகளும் கிடைக்கவில்லை என்று 5 குடும்பத்தினரும் வேதனை தெரிவித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com