‘நாகை மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது’
நாகை மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
நாகையில் திமுக அவைத் தலைவா் செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்று மேலும் பேசியது: தொண்டா்கள் தோ்தல் காலத்துக்கு முன்பு தங்களை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பொது உறுப்பினா்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. திமுக தொண்டா்களுக்கான இயக்கம். தொண்டா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதியையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்பது முதல்வரின் லட்சியம். திமுக தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பதை வரலாற்றில் பதிக்க வேண்டும். இதற்கு தொண்டா்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
மகளிா் உரிமைத் தொகை நாகை மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்துள்ளவா்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. கலைஞா் கனவு இல்ல திட்டத்தின்கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் வீடு கிடைக்கும். திமுகவின் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது தொண்டா்களின் கடமை என்றாா்.
மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் மதிவாணன், விவசாய அணி துணைத் தலைவா் வேதரத்தினம், தீா்மானக் குழு உறுப்பினா் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜன், மறைமலை, பொருளாளா் லோகநாதன், நகர செயலா்கள் ரா. மாரிமுத்து, செந்தில்குமாா், புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.