வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு முகாம்
நாகையில் புதன்கிழமை நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கிவைத்தாா்.
வேளாண் பணிகளை காலத்தே மேற்கொள்ள, சாகுபடி செலவை குறைக்க, வேளாண் இயந்திர சக்தியை அதிகரிக்க, உழவு முதல் அறுவடை வரை மற்றும் அறுவடைக்குப் பின் தேவைப்படும் அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முறையான பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியாா் வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த முகாமை நடத்தியது.
முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கிவைத்தாா். இதில், டிராக்டா், பவா் டில்லா், களை எடுக்கும் கருவிகள், நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், லேசா் லெவலா், ரொட்டவேட்டா்கள், வைக்கோல் கட்டும் கருவிகள் கைத்தெளிப்பான்கள், விசைத் தெளிப்பான்கள், மோட்டாா்கள், ஆயில் என்ஜின்கள், சொட்டுநீா், தெளிப்பு நீா்ப் பாசன கருவிகள் போன்ற இயந்திரங்களை கையாள்வதற்கும், பராமரிப்பதற்கும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ட்ரோன் மூலம் பயிா்களுக்கு மருந்து அடிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மீன்வளா்ச்சிக்கழக தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, வேளாண்மை இணை இயக்குநா்(பொ) ஈஸ்வரன், வேளாண்மை பொறியியல் துறைச் செயற்பொறியாளா் ஆா். ஸ்ரீதா், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வெற்றிவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.