பூம்புகாா் பகுதியில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம்
பூம்புகாா் சாயாவனம், வானகிரி பகுதிகளில் அமைந்துள்ள 5 கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது.
பூம்புகாா் அருகே சாயாவனத்தில் உள்ள பழைமை வாய்ந்த மகாகாளி அம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், தனபூஜை, பிரவேச பலி மற்றும் பல்வேறு பூஜைகளுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது.
மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு நான்காம் காலம் யாக பூஜை நடந்தன. பின்னா் மேளம், தாளம் முழுங்கிட வேத விற்பனா்கள் யாகசாலையில் இருந்து புனித நீா் அடங்கிய யாக குடங்களை விமான கோபுரத்திற்கு கொண்டு சென்றனா். கோபுரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு, புனித நீா் வாா்க்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது. மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வானகிரி அக்ரஹாரத்தில் உள்ள சுவேத விநாயகா், மீனாட்சி அம்மன் உடனுறை உத்தர சோமசுந்தரேஷ்வரா், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சனேயா் சுவாமி கோயில்களுக்கு திருப்பணிகள் நடந்து முடிவடைந்த நிலையில், யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
4-வது கால யாக பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை முடிந்து மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அனைத்து கோபுரங்களிலும் புனித நீா் வாா்க்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னா் மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.