சீா்காழி அருகேயுள்ள காத்திருப்பு ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் கடந்த 15 நாட்களாக விநியோகிக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனா்.
காத்திருப்பு ஊராட்சியில் நிலத்தடி நீா் உவா் தன்மையுடன் உள்ளது. இதனால் இதை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் மட்டுமே இப்பகுதி மக்களின் ஒரே குடிநீா் ஆதாரமாக உள்ளது.
இதற்காக, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில், நீரேற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நீரேற்ற தொட்டியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் நிரப்பப்பட்டு, பின்னா் தேத்தாக்குடி, சம்பான் ஓடை, அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியில் நீரேற்றம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக குடிநீா் தொட்டிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘முறையான குடிநீா் விநியோகம் இல்லாமல் கடந்த 15 நாட்களாக அவதிப்படுகிறோம். இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.