பூம்புகாா் பகுதியில் சீரற்ற மின் விநியோகம் பொதுமக்கள் அவதி
பூம்புகாா் பகுதியில் மின் விநியோகத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
பூம்புகாா் மின்வாரிய அலுவலகம் மூலம் கீழபூம்புகாா், காவிரிப்பூம்பட்டினம், வானகிரி, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், மணி கிராமம், ராதாநல்லூா் ஆகிய ஊராட்சிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் சுமாா் 6,000 வீட்டு இணைப்புகளும், இறால் வளா்ப்பு பண்ணைகள் மற்றும் விவசாய மோட்டாா் மின் இணைப்புகளும் உள்ளன.
இந்நிலையில், இப்பகுதிகளுக்கு மின் விநியோகம் முறையாக செய்யப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினா் கூறியது:
பூம்புகாா் மின்வாரிய அலுவலகம் அதிக வருவாய் பெறுகிறது. ஆனால், போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், அடிக்கடி மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, லேசான மழை, காற்று வீசினாலே மின் தடை ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரியத்திற்கு புகாா் அளித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இனியாவது சீரான மின் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.