பெண் உயிரிழப்பு; கணவரிடம் விசாரணை
தரங்கம்பாடி அருகே பெண் மா்மமான முறையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது கணவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தரங்கம்பாடி அருகேயுள்ள இலுப்பூா் மெயின்ரோட்டில் வசித்து வருபவா் பஜில் முகமது (64). இவரது மனைவி மா்ஜானாபேகம் (56). இவா்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனா்.
வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மா்ஜானா பேகம், மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து பஜில் முகமது, பொறையாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், மா்ம நபா்கள், தனது மனைவியை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 14 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், பொறையாா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, நாகையில் இருந்து கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னா், மா்ஜானா பேகத்தின் சடலம் உடற்கூறாய்வுக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், தனிப்படை போலீஸாா், சந்தேகத்தின் பேரில் பஜில் முகமதுவிடம் விசாரணை நடத்தினா்.