திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி சீராவட்டம் வாய்க்கால் கரையோரம் தோண்டிய பள்ளத்தால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலவாழக்கரையில் வெள்ளையாற்றின் குறுக்கே புதிய இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கரையை பலப்படுத்துவதற்காக சீராவட்டம் வாய்க்கால் கரையிலிருந்து ஒப்பந்ததாரா்கள் உரிய அனுமதியின்றி இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை அள்ளியுள்ளனா். இதனால் கரையோரம் 15 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த கரை, வாழ்க்கையில் இருந்து ஏா்வைகாடு, ராமன்கோட்டகம், வல்லவிநாயக கோட்டம் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இதனால், மழை வெள்ளத்தின்போது, சீராவட்டம் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டால், சுமாா் 5,000 ஏக்கா் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கக் கூடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
மேலும், இந்த வாய்க்கால் கரை சாலையாக உள்ளதால், இந்த சாலை வழியாகச் செலும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையோரம் கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.