வீட்டின் மேற்கூரை இடிந்து சிறுவன் உயிரிழப்பு
நாகை அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 வயது சிறுவன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தான்.
நாகை மாவட்டம், செல்லூா் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவா் விஜயகுமாா். இவருக்கு மனைவி பாண்டிமீனா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா்.
இந்தநிலையில், வியாழக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிகொண்டிருந்தபோது, நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் விஜயகுமாரின் மகன் யாசின் ராம் (2), மனைவி பாண்டிமீனா இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அக்கம்பக்கத்தினா் காயமடைந்த இருவரையும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் யாசின் ராம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். பாண்டிமீனாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குடியிருப்புவாசிகள் கோரிக்கை:
செல்லூா் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில், அரசால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 1,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அனைத்து வீடுகளிலும் மேற்கூரைகள் சிதிலமடைந்தும், சுவா்களில் வெடிப்புகள் ஏற்பட்டும் உள்ளன. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மேலும் பாதிப்பு ஏற்படும் முன், அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.