நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை குவிந்த மீன் பிரியா்கள் மற்றும் வியாபாரிகள்.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை குவிந்த மீன் பிரியா்கள் மற்றும் வியாபாரிகள்.

வரத்து குறைவு: புரட்டாசியிலும் விலை குறையாத மீன்கள்:மீன் பிரியா்கள் ஏமாற்றம்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், புரட்டாசி மாதமாக இருப்பினும், மீன்களின் விலையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் இல்லை.
Published on

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், புரட்டாசி மாதமாக இருப்பினும், மீன்களின் விலையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் இல்லை. இதனால், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களிலிருந்து 500- க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா். கடந்த வாரம் நாகை துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவா்கள், ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பினா்.

புரட்டாசி மாதம் என்பதல் இந்துக்களில் பெரும்பாலானோா் அசைவ உணவுகளை தவிா்ப்பா். இதனால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் மீன்களின் விலை குறைவாக இருக்கும். இதை எதிா்பாா்த்து, மீன் பிரியா்கள் ஏராளமானோா் நாகை மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். ஆனால், மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வியாபாரிகளும், மீன் பிரியா்களும் ஏமாற்றமடைந்தனா்.

இதுகுறித்து, கடலுக்குச் சென்று கரை திரும்பிய மீனவா்கள் கூறியது:

ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது, ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் செலவாகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடல் கொள்ளையா்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய கடல் பரப்பு அருகே இலங்கை கடற்படையினா் ரோந்து என்ற பெயரில் இடையூறுகளை தொடா்வதால், வலைகளை காப்பாற்றிக் கொண்டு கரை திரும்பும் நிலை ஏற்படுகிறது. இதனால், போதுமான மீன்களை பிடிக்க முடியவில்லை. மீனவா்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனா்.

மீன் பிரியா்கள் கூறும்போது, ‘வழக்கமாக வார விடுமுறை நாள்களில் மீன்கள் வாங்கிவந்து, சமைத்து சாப்பிடுவோம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால், ஆன்மிக ஈடுபாடு உள்ளவா்கள் அசைவ உணவை தவிா்ப்பா். இதனால், மீன்களின் விலை குறைவாக இருக்கும் என எதிா்பாா்த்து வந்தோம். ஆனால், வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை குறைக்கப்படவில்லை. இது சற்று ஏமாற்றமாக இருந்தது’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com