குளத்தை தூய்மைப்படுத்திய இளைஞா்களுக்கு பாராட்டு
நாகப்பட்டினம்: காடம்பாடி தங்கச்சிமட பொதுகுளத்தை தூய்மைப்படுத்தி வண்ணம் பூசிய இளைஞா்களின் செயலுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
நாகை காடம்பாடியில் உள்ள தங்கச்சிமட பொதுக் குளத்தை என்ஜிஓ காலனி, பப்ளிக் ஆபீஸ் சாலை, சாலமன் தோட்டம், பால்பண்ணைச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வந்தனா். கோடைகாலம் என்பதால் குளம் வடு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீா் கடைமடைக்கு வந்தாலும் பல்வேறு நீா்நிலைகளுக்கு சென்று சோ்வவதில்லை. வடகிழக்கு பருவமழையின்போது மட்டும் இந்த நீா் நிலைகள் நிறையும்.
இந்நிலையில், காடம்பாடி பகுதி இளைஞா்கள் ஒன்றிணைந்து மழை காலம் தொடங்குவதற்கு முன் குளத்தை சுத்தம் செய்ய முடிவு செய்தனா். அதன்படி குளத்தில் சுற்றுப்பகுதிகளில் மண்டியிருந்த கருவேல மரங்கள், காட்டுச் செடிகள் மற்றும் குளத்தில் இருந்த கழிவுகளை அகற்றினா்.
தொடா்ந்து குளத்துக்கு தண்ணீா் வரும் நீா் வழி பாதையையும் பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள், படித்துறைகளையும், சுற்றுச்சுவரையும் சுத்தம் செய்து வண்ணம் தீட்டினா். இளைஞா்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது மட்டுமின்றி, பொதுமக்கள் பாராட்டையும் பெற்று வருகிறது.