நாகை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.
நாகை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.

சுருக்குமடி வலை விவகாரம்: நாகை, காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தம்

சுருக்குமடி வலையை முற்றிலும் தடைசெய்ய வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

நாகப்பட்டினம்: சுருக்குமடி வலையை முற்றிலும் தடைசெய்ய வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் நாகை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அக்கரைப்பேட்டை’ கீச்சாங்குப்பம், காரைக்கால் ,கிளிஞ்சல் மேடு, காசாக்குடிமேடு உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுருக்குமடி வலையை தமிழக அரசு முற்றிலும் தடைசெய்ய வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், செவ்வாய்க்கிழமை (செப். 24) நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களின் கூட்டத்தை நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் முடிவின்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 500 விசைப்படகு மீனவா்களும், 3,500 ஃபைபா் படகு மீனவா்களும் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. துறைமுகங்களிலும், கடற்கரையோரங்களிலும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் மீனவா்கள் மீன் பிடிக்க செல்லாததால், மீன்பிடித் தொழிலைச் சாா்ந்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com