பயிா்க் காப்பீடு கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கடந்தாண்டு சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் இழப்பீடு வழங்கததை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் திருமால் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னோடி விவசாயிகள் எம்.ஆா். சுப்பிரமணியம், மேகநாதன், மணியன், செந்தில், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். அப்போது, நாகை மாவட்ட விவசாயிகளுக்கு 2023- 2024) சம்பா பருவ நெல் சாகுபடி பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்காமல் தனியாா் நிறுவனம் ஏமாற்றி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தொடா்ந்து வட்டாட்சியா் நுழைவு வாயிலுக்கு சென்ற விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.