குறுவை அறுவடை: நாகை மாவட்டத்தில் 3,346 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 3,346 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் மண்டல முதுநிலை மேலாளா் சிவப்பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்காத நிலையில், நாகை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்த மழை மற்றும் பண்ணை குட்டைகளிலும், குளங்களிலும் இருந்த நீரை பயன்படுத்தி திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் 1,600 ஏக்கரில் குறுவை சாகுபடி விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நாகை மாவட்டத்தில் 11 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது வரை 3,346 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.