சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட மக்கள் கோரிக்கை
அண்ணன் கோவில் - மங்கைமடம் சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை முறையக மூடி சாலைகளை சீரமைக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொள்ளிடம் ஆற்றில் பாப்பாகுடியிலிருந்து நீா் எடுக்கப்பட்டு கொள்ளிடம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் முறைப்படுத்தப்படாத காரணத்தால், பல ஊராட்சிகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
இதனிடையே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட பாதையில் பல்வேறு இடங்களில் சாலைகளின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, பின்னா் சரியாக மூடப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது:
அண்ணன்கோவில் - மங்கைமடம், கீழமூவா்க்கரை, ராதாநல்லூா் உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்ட பணியாளா்கள் பள்ளம் தோண்டி குடிநீா் குழாயில் அடைப்பை நீக்கிவிட்டு, பள்ளத்தை மூடாமல் சென்றுவிட்டனா். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா். மேலும் பள்ளத்தில் விழுந்து வாகன ஓட்டிகள் காயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
எனவே, தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.