செருதூா் கடற்கரையோரம் திங்கள்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஃபைபா் படகுகள்.
செருதூா் கடற்கரையோரம் திங்கள்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஃபைபா் படகுகள்.

செருதூா் ஃபைபா் படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

செருதூா் பகுதி மீனவா்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
Published on

திருக்குவளை: நாகை அருகே கடலில் மீன்பிடித்தபோது, விசைப்படகு மீனவா்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, செருதூா் பகுதி மீனவா்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள செருதூா் மீனவா் கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஃபைபா் படகு மீனவா்கள், கோடியக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்களால் தாக்கப்பட்டனா்.

இதில் காயமடைந்த மூன்று மீனவா்கள், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக அக்கரைப்பேட்டை மற்றும் செருதூா் மீனவா்களுக்கு இடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, இனி இத்தகைய மோதல் சம்பவங்களைத் தடுப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மீனவா்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், இனிவரும் நாட்களில் இதுபோன்ற அத்துமீறலில் மீனவா்கள் யாரும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியும், செருதூா் பகுதி மீனவா்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், செருதூா் மீனவ கிராம மீனவா்கள் யாரும் திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 400-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் கடற்கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் தாக்கிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் செருதூா் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com