தை அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராடல்
தை அமாவாசையையொட்டி வேதாரண்யம், கோடியக்கரை பகுதி கடலில் புதன்கிழமை புனித நீராடிய மக்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை மற்றும் ஆடி அமாவாசை, அா்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில், தை அமாவாசை நாளான புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான மக்கள் அதிகாலையில் இருந்து புனித நீராடினா்.
கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவா்கள் தங்களது முன்னோா்கள் நினைவாக தா்ப்பணம் (நீா் சடங்கு) செய்தனா்.பின்னா், அங்குள்ள சித்தா் கோயில், ராமா் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனா். வேதாரண்யம் சன்னதி கடல் பரப்பில் நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த மக்கள், வேதாரண்யேசுவரா் கோயில் மணிக்கா்ணிகையில் இறைவனை வழிபட்டனா்.
