கா்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் தனியாா் மருத்துவமனை முற்றுகை
நாகையில் பிரவசத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை இறந்ததால், பெண்ணின் உறவினா்கள் தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த தென்னமரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன். ஊரக வளா்ச்சித்துறையில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பிரகதீசா. இவா், முதல் பிரவசத்திற்காக, நாகையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டாா்.
இரவு மருத்துவா்கள் யாரும் பிரகதீசாவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் செவிலியா்களும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லையாம்.
இந்தநிலையில், சனிக்கிழமை காலை பிரகதீசாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வயிற்றிலயே குழந்தை (ஆண்) இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். பின்னா் அறுவை சிகிச்சை மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனா்.
இதற்கிடையே, மருத்துவா்கள், செவிலியா்கள் அலட்சியத்தால், குழந்தை இறந்ததாகக் கூறி பிரகதீசாவின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக உறவினா்கள் கூறும்போது, பிரகதீசா கடந்த 9 மாதங்களாக இதே மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், மருத்துவா்கள் முறையான சிகிச்சையை அளித்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றனா்.
உயிரிழந்த குழந்தையின் சடலத்தை வைத்துக்கொண்டு மருத்துவமனையில் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். வெளிப்பாளையம் காவல்நிலைய போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை நிா்வாகம் மற்றும் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா், மேலும் இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
