வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: நாகையில் 92.17% கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கல்
நாகை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்கள் 92.17 சதவீதம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில், நவம்பா் 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்கள் வீடு, வீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன.
கீழ்வேளூா் தொகுதியில் கீழ்வேளுா் பேரூராட்சி மற்றும் கீழ்வேளுா் வட்டம் அகரகடம்பனூா் ஆகிய பகுதிகளில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவம், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு வீடுவீடாக வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிட ம் அவா் கூறியது:
நாகை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியில் 653 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 67 மேற்பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தற்போதுவரை, நாகை பேரவைத் தொகுதியில் 1,71,275 படிவங்களும், கீழ்வேளூா் தொகுதியில் 1,71,623 படிவங்களும், வேதாரண்யம் தொகுதியில் 1,80,372 படிவங்களும் என மொத்தம் 5,23,270 கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 92.17 சதவீதம் ஆகும் என்றாா்.
