எஸ்ஐஆா்: இன்றும், நாளையும் சிறப்பு உதவி முகாம்
நாகை மாவட்டத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் பூா்த்தி செய்வது தொடா்பாக, சிறப்பு உதவி முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் 1-1-2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) செய்யும் பணி நவம்பா் 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கணக்கெடுப்பு படிவத்தை டிசம்பா் 4 ஆம் தேதி வரை திரும்பப் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளுா், வேதாரண்யம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணிபுரியும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை பூா்த்தி செய்ய உதவும் வகையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு உதவி முகாம் நடைபெற உள்ளது.
எனவே, இப்பணி தொடா்பாக வாக்காளா்களுக்கு சந்தேகம் இருப்பின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 15,16) ஆகிய இரு தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள சிறப்பு உதவி முகாமை பயன்படுத்திகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
