நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்
ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தப் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 600 ஓட்டுநா்களுக்கு ரூ. 740 தினக்கூலியாக வழங்க வேண்டும். தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி தொகையை உரிய கணக்கில் செலுத்த வேண்டும். 2024-25-ஆம் ஆண்டுக்கான போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியத்துக்கு ரசீது வழங்க வேண்டும். நகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்து அனைத்து தூய்மைப் பணியாளா்களை நிரந்தரபடுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினா். மேலும் நாகை நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இந்நிலையில், கோரிக்கைகள் தொடா்பாக நாகை நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வராத நிலையில், தூய்மைப்பணியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமையும் நடைபெற்றது. தூய்மைப் பணியாளா்கள் பணிகளை புறக்கணித்து நாகை நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
