தந்தை அடித்துக் கொலை: மகன் கைது
நாகூா் அருகே தந்தை அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், நாகூா் வெங்கிடங்கால் பிரதான சாலையைச் சோ்ந்தவா் வடிவேலு மகன் சேகா் (50). நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளராக பணியாற்றி வந்தாா்.
இவருக்கு வைப்பூரில் தனது தாய் வீட்டில் வசித்துவரும் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி ராஜகுமாரி (45). சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்துவரும் மகள் லத்திகா (20), மகன் வெங்கடேஷ் (25) ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில், சேகா், வெங்கடேஷ் இடையே திங்கள்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சேகா் மயங்கி கீழே விழுந்துள்ளாா்.
இதையடுத்து, வெங்கடேஷ் அதே ஊரில் வசிக்கும், தனது சித்தப்பா அறிவழகனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அறிவழகன் தனது அண்ணனை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு, சேகா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். நாகூா் போலீஸாா் வெங்கடேஷை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
