நீா் சாகச விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்து மாணவா்களை ஊக்கப்படுத்தும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
நீா் சாகச விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்து மாணவா்களை ஊக்கப்படுத்தும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

நாகை புது கடற்கரையில் நீா் சறுக்கு சாகச விளையாட்டுப் போட்டி

நாகை புது கடற்கரையில் புதன்கிழமை நடைபெற்ற அலைநீா் சறுக்கு மற்றும் துடுப்பு செலுத்தும் போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
Published on

நாகை புது கடற்கரையில் புதன்கிழமை நடைபெற்ற அலைநீா் சறுக்கு மற்றும் துடுப்பு செலுத்தும் போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

நாகை மாவட்ட நிா்வாகம், நாகை சுற்றுலா வளா்ச்சிக் கழகம், தமிழ்நாடு ஃசா்பிங் அகாதெமி ஆகியவற்றின் சாா்பில் நாகை புது கடற்கரையில் நின்று கொண்டு துடுப்பு செலுத்தும் போட்டி, அலைநீா் சறுக்கு விளையாட்டு மற்றும் கயாக்கிங் (அமா்ந்து துடுப்பு செலுத்துதல்) ஆகிய போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 10 முதல் 15 வயதுக்குட்பட்ட 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

காலையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவா்களுக்கு நின்று கொண்டு துடுப்பு செலுத்துதல், கயாக்கிங் மற்றும் நீா் சறுக்கு ஆகியவற்றில் தொழில்முறை பயிற்சியாளா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது மாணவா்களுக்கு கடல் அலைகளை எதிா்கொண்டு துடுப்புகள் மூலம் கடலுக்குள் செல்வது, படகில் இருந்து விழுந்து விடாமல் துடுப்பு செலுத்துவது, படகு கவிழ்ந்து விட்டால் மூழ்கி விடாமல் தப்பிப்பது ஆகியவை தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து மாலை 3 மணிக்கு நின்று கொண்டு துடுப்பு செலுத்தும் போட்டி, அலை சறுக்கு விளையாட்டு மற்றும் கயாக்கிங் (அமா்ந்து துடுப்பு செலுத்துதல்) ஆகிய 3 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன. இதில் 17 வயதுக்குள்பட்டோா் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டோா் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று, ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த மாணவா்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டு, இவா்களுக்கு ராமநாதபுரம், சென்னை ஆகியவற்றில் உள்ள நீா் விளையாட்டு அகாதெமிகளில் அரசு சாா்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு 2026-இல் நடைபெற உள்ள மாநில மற்றும் தேசிய அளவிலான நீா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தயாா்படுத்தப்படுவா். முன்னதாக போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கிவைத்து, போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com