திருவாரூர், செப். 23: மன்னார்குடியில் வரும் 30-ம் தேதி தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மன்னார்குடி பூமாலை வணிக வளாகத்தில் செப். 30-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
முகாமில் சுமார் 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவன அலுவலர்கள் பங்கேற்று தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 முதல் எஸ்எஸ்எல்சி, மேல்நிலைக்கல்வி, தொழில் பயிற்சி பட்டயம் மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று வழங்கப்படும். பங்கேற்பவர்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்து தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று வேலைவாய்ப்பைப் பெற்று பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்பவர்கள் 2 மார்பளவு புகைப்படம் மற்றும் கல்வித் தகுதிக்கான அசல்சான்று, நகல் ஆகியவற்றை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தை 04366-221031 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.