சுடச்சுட

    

    புராதன சிலைகளை பாதுகாக்க கிராமங்களில் பாதுகாப்புக்குழு

    By திருவாரூர்  |   Published on : 06th June 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் பழமையான கோயில்களில் உள்ள புராதன சிலைகளைப் பாதுகாக்க கோயில்கள் உள்ள கிராமங்களில் முக்கியஸ்தர்களைக் கொண்டு பாதுகாப்புக் குழு அமைக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    பழங்கால கோயில்களில் பண்டைய தமிழர்களின் கலைப் பண்பாடு, வீரம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலைச்செல்வங்கள் உள்ளன. தவிர விலை மதிப்பற்ற ஐம்பொன்னாலான சாமி (கலை நயத்துடன்) சிலைகளும் உள்ளன.

    பெரிய கோயில்களில் உயரியப் பாதுகாப்பில் சிலைகள் பாதுகாக்கப்படும். அதேவேளையில் சிறிய மற்றும் தொன்மை வாய்ந்த சிதிலமடைந்து, புனரமைப்பின்றி போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ள கோயில்களில் சாமி சிலை திருட்டு சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே அண்மையில் 3 ஐம்பொன்னாலான அம்மன் சிலைகள், 2 வெண்கல மாரியம்மன் சிலைகள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. வருங்காலங்களில் சாமி சிலைத் திருட்டை தடுக்கும் வகையில், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றும் வகையில் கோயில் உள்ள கிராமங்களில் முக்கியஸ்தர்களைக் கொண்டு பாதுகாப்புக்குழு அமைக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் கூறியது:

    முக்கியக் கோயில்களில் புராதன சிலைகள் பாதுகாப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், குடவாசல் கோயிலில் சிலைத் திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து சிலைத் திருட்டை தடுக்க சிறப்பு நடவடிக்கையாக கோயில்கள் உள்ள கிராமங்களில் அந்தந்த ஊர்த் தலைவர், முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு பாதுகாப்புக்குழு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சில கோயில்களில் அலாரம் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தவும் கோயில் நிர்வாகத்திடம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு அமைப்பின் முதல் கட்டமாக திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய காவல் உட்கோட்டங்களில் டிஎஸ்பி தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பழமையான கோயில்கள் எத்தனை உள்ளது. அங்கு புராதன சிலைகளின் இருப்புக் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

    சிலைத் திருட்டை தடுக்க ஓய்வுபெற்ற காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினருடன் இணைந்து சிலைப் பாதுகாப்பில் ஈடுபடும் வகையில் கிராமங்களில் குழு அமைக்கப்படுகிறது என்றார் காளிராஜ் மகேஷ்குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai