சுடச்சுட

  

  காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவீன மீன் குஞ்சு பொறிப்பகம் மூலம் கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

  காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகள் மீன் வளர்ப்பில் ஈடுபடும் வகையில் நவீன மீன் குஞ்சு பொறிப்பகம் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை இப்பணிகள் தொடங்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஆ. சுரேஷ் தொடங்கிவைத்தார்.

  இப்பொறிப்பகம் மூலம் கட்லா, ரோகு, மிர்கால் ரக கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுமெனவும், நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் இதனை வாங்கி லாபமீட்டும் வகையில் தொழில் செய்ய முன்வர வேண்டுமென சுரேஷ் கேட்டுக்கொண்டார்.

  நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலைய முதல்வர் ந. ராஜேந்திரன், விவசாயத்தின் உபத் தொழிலான கலப்பின நன்னீர் மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீன் வளப்பில் ஈடுபட விவசாயிகள் முன்வர வேண்டும். தேவையான பயிற்சி, உற்பத்தி பெருக்கத்திற்கான நுணுக்கங்கள் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் கற்றுத்தரப்படும் என்றார்.

  நிலைய மீன்வள தொழில்நுட்ப வல்லுநர் கோ. விஜயகுமார் கூறும்போது, இப்பொறிப்பகத்தில் அதிக அளவு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டப்பட்டுள்ளது.

  கெண்டை மீன் வகைகள் விரல் அளவில் வளர்ந்தவுடன் குஞ்சுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இங்கு பொறிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம், வெளியூருக்குச் சென்று மீன் குஞ்சுகள் வாங்கிவந்து தொழில் செய்யும் நிலை மாறியிருக்கிறது என்றார்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீன்வள உதவி ஆய்வாளர் ஜெ. முருகேசன் செய்திருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai