Enable Javscript for better performance
தேசிய வேளாண் காப்பீடு திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய வேளாண் காப்பீடு திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க கோரி மனு

    By திருவாரூர்,  |   Published on : 19th June 2014 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய வேளாண் காப்பீடுத் திட்டம் தொடர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அரசின் வேளாண்துறை முதன்மைச் செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார்.

    அவரிடம் காவிரி டெல்டா விவசாயிகள் குழுமப் பொதுச் செயலர் வெ. சத்தியநாராயணன் அளித்த மனு விவரம்:

    1999-ல் கொண்டு வரப்பட்ட தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தின்படி வேளாண் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சம அளவு விகிதத்தில் அரசு நிதியிலிருந்து வழங்கி வந்தன.

    இந்த நடவடிக்கை விவசாயிகள் அச்சமின்றி விவசாயத்தில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தியது.

    ஆனால், இந்த தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு ரத்து செய்து, திருத்தியமைத்து புதிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

    இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. திருத்தப்பட்ட வேளாண் காப்பீடுத் திட்டத்தில் கம்பெனிகள் பிரீமியத் தொகையைப் பெற்றுக்கொண்டு கம்பெனிகளே இழப்பீடு வழங்கும் வகையில் உள்ளது. தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை ரத்து செய்ய கடந்த காங்கிரஸ் அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார்.

    குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவு இவைகள் தேசிய வேளாண் திட்டமே தொடர வேண்டுமென்று கூறியுள்ளதுடன், இதுவரை திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக விவசாயிகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். எனவே மத்திய அரசிடம் தேசிய வேளாண்மை காப்பீடுத் திட்டத்தையே நடைமுறைபடுத்த வலியுறுத்தி விவசாயிகளை முதல்வர் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai