விடுதிகள், காப்பகங்களில் தங்கியிருப்போர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
By காரைக்கால் | Published on : 20th June 2014 04:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காரைக்காலில் அரசு விடுதிகள், தனியார் காப்பகங்களில் தங்கியிருப்போர் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் லெ. முகம்மது மன்சூரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் அ. வின்சென்ட் தலைமையிலான நிர்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:
காரைக்காலில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகள், தனியார் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான விடுதி, காப்பகங்களில் அடிப்படை வசதியின்மை, வார்டன் இல்லாமை, பாதுகாப்பு குறைபாடு நிலவுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட விடுதி, காப்பகங்கள் இருப்பதாக தெரியவருகிறது. இவை யாருடைய கட்டுபாட்டில் இயங்குகிறது என்றே தெரியவில்லை.
தனியார் காப்பகங்கள் நடத்த அரசு எந்த வகையில் அனுமதி வழங்கியுள்ளது என்பது ஆய்வுக்குள்படுத்த வேண்டும். மனநோயாளிகளை அழைத்துச் சென்று பாதுகாக்கப்படுவதாக கூறும் காப்பகங்கள், அவர்களை கொடுமைப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. தனியார் காப்பகங்களில் எத்தனை பேர் தங்கி படிக்கிறார்கள் என்ற விவரம் அரசுத் துறையிடம் இல்லை. காப்பகங்களில் தங்கியிருப்போர் உயிரிழந்தால் அவர் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்படுவது இல்லை.
விடுதி, தனியார் காப்பகங்களில் தங்கியுள்ள மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையே தொடர்கிறது. இவைகளை வழிநடத்த, கண்காணிக்க என தனியாக குழு அமைக்கப்பட வேண்டும். பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் அண்மையில் நடந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.