Enable Javscript for better performance
பெண்ணின் கழுத்தை அறுத்து எட்டரை பவுன் நகை கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணின் கழுத்தை அறுத்து எட்டரை பவுன் நகை கொள்ளை

    By திருவாரூர்  |   Published on : 21st June 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து எட்டரை பவுன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.

    திருவாரூர் காந்தி சாலையைச் சேர்ந்தவர் ஜவகர் மனைவி ராதிகா (35). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மகன் நிரஞ்சன்குமாருடன் (10) திருவாரூரில் தனியாக வசித்து வருகிறார் ராதிகா.

    இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு ராதிகா வீட்டு அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டு இருந்தாராம். அப்போது உள்ளே நுழைந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் ராதிகாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

    ராதிகா நகையை தர மறுத்ததால், அந்த மர்ம நபர் கத்தியால் ராதிகாவின் கழுத்தை அறுத்துவிட்டு 5 பவுன் தாலிச் சங்கிலி, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இதில் ராதிகா மயங்கி விழுந்தார்.

    பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து அருகே தூக்கிக்கொண்டிருந்த மகன் நிரஞ்சன்குமாரை சைகையால் எழுப்பி பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

    இதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலென்ஸ் மூலம் ராதிகா திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் டி.எஸ்.பி. மதுரசாமி, நகரக் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai