சுடச்சுட

    

    மக்கள் எதிர்ப்பால் கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

    By திருவாரூர்,  |   Published on : 28th June 2014 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அபிவிருத்தி கிணறுகள் அமைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் மக்கள், விவசாயிகள் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில், திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், நன்னிலம், கூத்தாநல்லூர் மற்றும் பெரியகோயில் களப்பால் ஆகிய பகுதியில் 20 இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அபிவிருத்தி கிணறுகள் அமைப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறிய கருத்துகள்:

    பாண்டியன்: எண்ணெய் கிணறுகள் அமைக்கவுள்ள பகுதிகளில் விவசாயிகள், பொது மக்களை அழைத்து கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி கருத்துகளை அறிந்து, அதன் பிறகு கூட்டம் நடத்த வேண்டும். மேலும் இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    கூடங்குளம் அணு எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முகில்: திட்டத்தின் முழு அறிக்கையை கிணறு அமைக்கும் தொடர்புடைய ஊராட்சி அலுவலக விளம்பர பதாகையில் ஒட்ட வேண்டும்.

    வரதராஜன்: கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தும் கூட்டம் நடைபெற்றதாக பதிவு செய்தது முறையற்றது.

    வை. செல்வராஜ்: இக்கூட்டத்தை ரத்து செய்து, ஆட்சியர் ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் பேசி கிணறு அமைக்கும் கிராமங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே. உலகநாதன்: பொதுமக்கள், விவசாயிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்துவது இக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்பதே.

    தஞ்சாவூர் காளியப்பன்: டெல்டாவில் விவசாயம் மட்டுமே தேவை. எரிவாயு வேண்டாம். கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்: கூட்டத்தை சட்டப்படி ஓஎன்ஜிசி நிறுவனம் நடத்துகிறது. இங்கு பேசப்படும் விவசாயிகள், மக்களின் கருத்து பதிவு செய்யப்பட்டு இயற்கை எரிவாயு துறைக்கு அனுப்பி, அதன்பிறகு சட்டப்படி திட்டம் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது விவசாயிகள், மக்கள் ஆகியோரின் கருத்துப்படி கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

    கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வி. நளினா, காரைக்கால் காவேரி அசெட் ஓன்ஜிசி நிறுவன பொதுமேலாளர் ஏ. ஜெயசேகரன், துணைப் பொது மேலாளர் வி. குமரேசன், பயிற்சி ஆட்சியர்கள் எஸ். ஜானகி, ராஜராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai