சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி, ரூ. 1.65 லட்சத்தை பறித்துச் சென்ற நால்வரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

  குடவாசல் காவல் சரகம், பிலாவடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர் கந்தன், மதுக்கடையின் விற்பனை ரூ. 1.65 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

  மேலராமன் செட்டி என்ற இடத்தில் வந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் கந்தனை வழிமறித்து அரிவாளால் வெட்டி, அவரிடமிருந்த ரூ. 1.65 லட்சம் மற்றும் கந்தன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

  அப்போது, அந்த வழியாக வந்த சக ஊழியர்கள் கந்தனை மீட்டு, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். குடவாசல் போலீஸார் மற்றும் ரோந்துப் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கும்பகோணம் புறவழிச்சாலையில் போலீஸார், அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

  இதில், அந்த நபர் கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டை விமல் என்பதும், டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்தவர்களில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், அந்தப் பணத்தில் விமல் தனது பங்காக ரூ. 40 ஆயிரம் மற்றும் கந்தனின் வாகனம் ஆகியவற்றை கொண்டு வந்ததும் தெரிந்தது.

  குடவாசல் போலீஸார் விமலை கைது செய்து, அவரிடமிருந்த ரொக்கம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai