சுடச்சுட

  

  திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தால் மத்திய அரசுக்கு அழியாத புகழ் சேரும்: கவிஞர் முத்துலிங்கம் பேச்சு

  By DN  |   Published on : 29th April 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தால், மத்திய அரசுக்கு எக்காலத்திலும் அழியாத புகழ் வந்து சேரும் என்றார் திரைப்பட பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞருமான முத்துலிங்கம்.

  உலகப் புத்தக நாள் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, மன்னார்குடியில் தஞ்சை வேட்ஸ் வொர்த் புத்தக நிலையம் சார்பில், புத்தகக் கண்காட்சி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். நாகமுத்து எழுதிய இன்புற்று வாழ என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

  விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கவிஞர் முத்துலிங்கம் பேசியது:

  உலகின் எந்தப் பகுதியிலும் உரிமை முழக்கம் தோன்ற காரணமாக இருந்தவை உண்மை தகவல்கள் அடங்கிய வரலாற்று நூல்கள். படித்தவர்கள் மக்களை திரட்டி அகிம்சை மற்றும் ஆயுதப் புரட்சியை நோக்கிச் சென்று உரிமைகளை மீட்டு எடுத்துள்ளனர்.

  விமானப் பயணத்திலும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்திலும் நேரு புத்தகங்களை படித்துக்கொண்டிருந்தார். பகத்சிங் தூக்குமேடை ஏறும் வரை நூல்களைப் படித்தார். நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு செல்லும் நேரம் வரை அறிஞர் அண்ணா புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருந்தார்.

  தென்ஆப்ரிக்காவில் இருந்த காந்திக்கு மானமாற்றம் ஏற்படுத்திய நூல் திருக்குறள்தான். உண்ணும் உணவு ரத்தத்துடன் கலந்துவிடும், படிக்கும் புத்தகங்கள் சித்தாந்தத்தில் களக்கும். மதச்சார்பற்று கண்ணியம், ஒழுக்கம் போதிக்கும் நூலாக திருக்குறள் உள்ளதால், இதை தேசிய நூலாக மத்திய அரசு அறிவித்தால் எக்காலத்திலும் அழியாத புகழ் இந்த அரசுக்கு வந்து சேரும்.

  உரைநடையாக, இலக்கியமாக தமிழ் இருந்து வந்த நிலையில் பாரதியார் வரவுக்குப் பிறகுதான் கவிதை நடையாக மாறியது. இலக்கண, இலக்கிய புலமையில் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத நிலைக்கு உயர்ந்து விளங்கியவர் பாரதிதாசன் என்றார் அவர்.

  விழாவுக்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (ஓய்வு) ரா. ஜெயபால் தலைமை வகித்தார். தி.க. மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், ரோட்டரி சங்க துணை ஆளுநர் வி. ராஜகோபால், வர்த்தக சங்கத் தலைவர் கே.ஜெ.ஆர். பாரதிஜீவா, அமெச்சூர் கபடிக் கழக மாநில அமைப்புச் செயலர் ராச. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  புத்தகக் கண்காட்சியை மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி முதல்வர் சிவ. கார்த்திகேயன் தொடக்கிவைத்தார். முதல் விற்பனையை ஏஆர்ஜெ கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ஏ. ஜீவகன்அய்யநாதன் பெற்றுக்கொண்டார்.

  உயர்நீதிமன்ற நீதிபதி எழுதிய நூலை மூத்த வழக்குரைஞர்கள் பா. தமிழரசன், எஸ். உதயகுமார், என். சுவாமிநாதன், சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் இரா. காமராசு, எழுத்தாளர் சுந்தரபுத்தன், எஸ்.கே. கல்வி நிறுவனங்களின் தலைவர் க. சதாசிவம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai