Enable Javscript for better performance
இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க முயற்சி செய்கிறது பாஜக- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க முயற்சி செய்கிறது பாஜக

    By திருவாரூர்  |   Published on : 28th January 2015 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர், ஜன. 27: இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன்.

    திருவாரூரில் திங்கள்கிழமை தொடங்கிய கட்சியின் 22-வது மாவட்ட மாநாட்டில் மேலும் அவர் பேசியது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள் தற்போது புதிய எல்லையை எட்டியுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கக்கூடிய முயற்சியில் பாஜகவும், இந்து அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. பாஜகவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வருவதே கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை.

    இந்துத்துவத்தைக் காப்பாற்ற உலகமயம், உலகமயத்தைக் காப்பாற்ற இந்துத்துவம் என ஒரு சுழற்சி முறையை பிரதமர் நரேந்திரமோடி முன்மொழிந்துள்ளார். இது மிகவும் அபயகரமானது என்பதை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

    சுயசார்பான வளர்ச்சி என்பது இந்தியாவின் கடந்தகால பொருளாதார பாதை. ஐந்தாண்டு திட்டத்தை கலைக்க பாஜக அமைச்சரவை கூட்டத்தின் மூலம் முடிவு செய்திருப்பது ஜனநாயக விரோத செயல். ஐந்தாண்டு திட்டங்களை மக்கள் வரிப்பணத்தில் முதலீடு செய்து இயற்கை ஆதாரங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், பெரு முதலாளிகளுக்கு சாதகமான நிலையையே பாஜக பின்பற்றுகிறது. இந்தியாவில் உலகமயம் பின்பற்றப்படுவது போல் சீனாவிலும் உலகமயம் பின்பற்றப்படுகிறது. இந்தியாவின் வருமானங்கள் பெரு முதலாளிகளுக்கு மட்டும் போய் சேருகிறது. சீனாவின் வருமானங்கள் அந்த நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலகமயத்தை பற்றி பேசுபவர்கள் இந்த உண்மையை பேச மறுக்கிறார்கள் என்றார் மகேந்திரன்.

    மாநாட்டில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன், மாநில துணைச் செயலர் கோ. பழனிச்சாமி, மாவட்டச் செயலர் வெ. வீரசேனன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai