சுடச்சுட

  

  மன்னார்குடியில் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி

  By மன்னார்குடி  |   Published on : 02nd March 2016 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காமல் அரசுப் போக்குவரத்துக்கழகம் தாமதப்படுத்தி வந்ததையடுத்து, மன்னார்குடி சார்பு நீதிமன்றம் நீதிபதி உத்தரவின்பேரில் இழப்பீட்டுத்  தொகைக்கு ஈடாக மன்னார்குடியில் 3 அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

  நாகப்பட்டினம் மாவட்டம், வடகரையைச் சேர்ந்த  கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (32). இவர் தனியார் நிறுனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினார். கடந்த 5.4.2009-இல் குருமூர்த்தி, மன்னார்குடிக்கு வந்துவிட்டு நாகப்பட்டினத்துக்கு திரும்பிச் சென்றபோது, குடிதாங்கிச்சேரி அருகே அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

  குருமூர்த்தியின் மனைவி அங்கையர்கண்ணி, கணவர் இறப்புக்கு இழப்பீடு கேட்டு மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி மாரியாயி இழப்பீடாக ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 19.7.2011-இல் உத்தரவு பிறப்பித்தார்.

  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இழப்பீடு வழங்க தாமதித்து வந்ததையடுத்து, மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் தனது வழக்குரைஞர் பி. தமிழரசன் மூலம் மேல் முறையீட்டு மனு அளித்திருந்தார் அங்கையர்கண்ணி.

  இந்நிலையில், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சுந்தர் அய்யா, அரசுப் போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

  இதையடுத்து, மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 3 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து சார்பு நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai