சுடச்சுட

    

    சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்துக் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியர்

    By திருவாரூர்  |   Published on : 06th March 2016 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எம். மதிவாணன் கூறினார்.

    திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்துவது குறித்த அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் பேசியது:

    திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கே. பிரேம்குமார், மன்னார்குடி தொகுதிக்கு கோட்டாட்சியர் செல்வசுரபி, திருவாரூர் தொகுதிக்கு கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, நன்னிலம் தொகுதிக்கு உதவி ஆணையர் (கலால்) அசோகன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பேரவைத் தேர்தல் அறிவித்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் வேட்பாளர்களுக்கான நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுவது, விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளன.

    தேர்தல் நடத்தை விதி மற்றும் தேர்தல் செலவினக் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்க தொகுதி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில்  வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வாட்டாட்சியர் நிலையான அலுவலர்களில் ஒருவர், காவல்துறை உதவி  ஆய்வாளர், காவலர்கள் மற்றும் விடியோகிராபர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    மேலும் அரசு வளாகத்திலோ அல்லது அரசு கட்டடங்களிலோ,  சுவர் விளம்பரம் எழுதுதல், விளம்பரங்கள் ஒட்டுதல்,  எவ்வகையாகவும் தூய்மை குறைத்தல், விளம்பரப் பதாகைகள் வைத்தல் ஆகிய யாவும் அனுமதிக்கப்பட மாட்டாது.

    நகராட்சி எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் தனியார் கட்டடங்கள்  அந்தந்த கட்டட உரிமையாளர்கள் ஒப்புதல் வழங்கினாலும் சுவர்  விளம்பரம் எழுதுதல், விளம்பரம் பிரசுரம் ஒட்டுதல் கூடாது.

    இதர பகுதிகளில் தனியார் கட்டடம் மற்றும் இடங்களின்  உரிமையாளர்களின் அனுமதியுடன் மட்டுமே சுவர் விளம்பரம்  எழுதுதல், விளம்பரப் பிரசுரம் ஒட்டுதல் செய்யலாம்.

    எழுத்து மூலமான அனுமதி பெறாத இனங்களில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த விளம்பரங்களுக்கான செலவுத் தொகை வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.

    அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் வாக்காளர்களுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருள்கள், பணம் ஆகியன வழங்கக் கூடாது. எந்தவொரு அரசியல் கட்சியும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

    எந்த ஒரு நிலையான பொருத்தப்பட்ட கம்பங்களிலோ அல்லது வாகனங்களிலோ பொருத்தப்பட்ட ஒலி பெருக்கி சாதனங்களை இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பயன்படுத்தக்கூடாது. லஞ்சம் கொடுத்தல், தகாத செல்வாக்கை பயன்படுத்துதல், வாக்காளரை அச்சுறுத்துதல், ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டருக்குள் பிரசாரம் செய்தல், வாக்குப்பதிவு தொடங்கும் 48 மணி நேரத்துக்கு பின்பு பிரசாரம் செய்தல் ஆகியன முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

    கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் மற்றும்  அங்கீகரிக்கப்பட்ட அதிமுக, திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai