Enable Javscript for better performance
சாலை அமைப்பதில் தகராறு: திமுக - அதிமுக இடையே மோதல்- Dinamani

சுடச்சுட

    

    சாலை அமைப்பதில் தகராறு: திமுக - அதிமுக இடையே மோதல்

    By மன்னார்குடி  |   Published on : 09th March 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிதாக சாலை அமைக்கும் பணியின்போது, திமுக, அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் அப்பணியை நிறுத்திவைத்து மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டார்.

    மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட 18 ஆவது வார்டு கொழும்பு ஸ்டோர் சந்திலிருந்து மஸ்தான் பள்ளி தெரு தனியார் திருமண மண்டபம் வரை நகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி எடுத்த தனியார் நிறுவனத்தினர் புதிதாக சாலை அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

    தகவலறிந்த நகர திமுக செயலர் வீரா. கணேசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் பழ. மணி, கட்சியின் நகர்மன்றக்குழுத் தலைவர் கை. கார்த்திகேயன், உறுப்பினர் கண். மணிவண்ணன் ஆகியோர் சாலை அமைக்கும் இடத்துக்குச் சென்று, பணியை நிறுத்தக் கோரினராம்.

    அப்போது, அங்கு வந்த நகர அதிமுக செயலர் ஏ.டி. மாதவன், துணைச் செயலர்  வி.என். அன்புச்செல்வம், பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம், 18 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் வி. கண்ணதாசன்  ஆகியோர் சாலை பணியை விரைவுபடுத்துமாறு கூறினராம். இதனால் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நிகழ்விடத்துக்கு வந்த நகராட்சி ஆணையர் (பொ) ச. மணியிடம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று திமுகவினர் தெரிவித்தனர்.

    சாலை அமைக்க சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்ததாரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பழைய அனுமதியின் கீழ் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினர். அப்போது, திமுக, அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீஸார் இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எஸ். செல்வசுரபி, மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் திமுக, அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், 18 ஆவது வார்டில் தாற்காலிகமாக சாலை அமைக்கும் பணியை நிறுத்திவைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ். செல்வசுரபி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai