தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை
By திருவாரூர் | Published on : 11th March 2016 08:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூரில், சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரயில்வே மேம்பாலம், வடக்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இதையடுத்து, மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் அளவில் 1 அலுவலர், 1 முதன்மை காவல்துறை அலுவலர், 3 காவலர்கள், விடியோ ஒளிப்பதிவாளர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், திருவாரூரில் வியாழக்கிழமை ரயில்வே மேம்பாலம், வடக்குவீதி ஆகிய இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரூ. 50,000-க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லக் கூடாது. ரூ. 10,000-க்கும் மேல் மதிப்புள்ள ஆயுதங்கள், மதுபானங்கள், பரிசு பொருள்கள் எடுத்துச் செல்லக்கூடாது.
தாற்காலிக சோதனைச் சாவடி அமைத்து 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்கள் கண்டறிய வாகனச் சோதனை நடத்த நிலை கண்காணிப்புக் குழு 4 தொகுதிகளுக்கும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இக்குழுக்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்களில் விதிமீறல்களை கண்டறிய விடியோ கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவீனம் கண்காணிக்கப்படும் என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. முத்துமீனாட்சி உடனிருந்தார்.