குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தினால் கடும் நடவடிக்கை:ஆணையர் எச்சரிக்கை
By திருத்துறைப்பூண்டி | Published on : 17th March 2016 12:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால், மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படுமென நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, நகராட்சி ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருத்துறைப்பூண்டி நகரின் பல பகுதிகளில் குடிநீர் சீராக வருவதில்லையென பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 19-ஆவது வார்டு ஜீவா தெருவில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு, குடிநீர் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நகராட்சி அனுமதி பெறாமல் இணைப்பு வைத்துள்ளவர்கள் அதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறான முறையில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பவர்கள், அதை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும்.
நகராட்சி நிர்வாகத்தால் கண்டுபிடிக்கப்பட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.