சுடச்சுட

    

    சாதி வெறியை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்

    By மன்னார்குடி  |   Published on : 18th March 2016 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூக வலைதளங்கள் மூலம் சாதி வெறியைத் தூண்டுவோர் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    மன்னார்குடி ஒன்றிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற குழுக் கூட்டம் அதன் ஒன்றியத் தலைவர் பி.கே.ராஜகுரு தலைமையில் நடைபெற்றது. 

    இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23-ஆம் தேதியன்று, மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள 55 கிளைகளிலும் இளைஞர் பெருமன்ற கொடியேற்றி, பகத்சிங் படத்துக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்துவது.

    தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ் ஆகியோரின் சாதிய ஆணவக் கொலையைத் தொடர்ந்து தற்போது, உடுமலைப்பேட்டை சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் எவ்வித அச்சமின்றி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். சாதியம் தொடர்பான சண்டைகள் மாறி, சாதியக் கொலைகளாக அதிகரித்து வருகின்றன. சங்கர் கொலையில் தொடர்புடைய அனைவரையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    சமூக வலைதளங்கள் மூலம் சாதி வெறியைத் தூண்டுவோர் மீது, தமிழக அரசும், காவல் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதவெறி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும், சாதிய ஆணவக் கொலைக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் மாவீரன் பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23-ஆம் தேதி மன்னார்குடியில் கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.வீரமணி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.மகேந்திரன், இளைஞர் மன்ற ஒன்றியச் செயலாளர் எஸ்.பாப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai