Enable Javscript for better performance
அடியாட்களை வைத்து கடன் வசூல் செய்வதைத் தடுக்க சட்டம் தேவை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

  

  அடியாட்களை வைத்து கடன் வசூல் செய்வதைத் தடுக்க சட்டம் தேவை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் தனியார் நிதிநிறுவனங்கள், தனியார் வங்கிகள் அடியாட்களை வைத்து மிரட்டி, கடன் வசூலில் ஈடுபடும் போக்கைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தனியார் வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  தஞ்சாவூர் மாவட்டம், சோழகன் குடிகாட்டில் விவசாயி பாலா என்கிற பாஸ்கரன் காவல் துறை மற்றும் வங்கிக் கடன் வசூல் பிரிவைச் சேர்ந்த குண்டர்களால் தாக்கப்பட்டு, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதும், அரியலூர் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்த விவசாயி அழகர் தற்கொலை செய்து கொண்டதும் ஒருபானை சோற்றுக்கு ஒருசோறுபதம் என்ற அளவிலேயே அமைந்துள்ளது.

  மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியின்போது, பணக்காரர்கள் மட்டுமின்றி ஏழை சாமானிய மக்களும் வங்கி சேவையைப் பெற்று பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.

  காங்கிரஸ் ஆட்சியில் நிதித் துறை இணையமைச்சராக இருந்த ஜனார்த்தன் பூஜாரி 20 அம்சத் திட்டத்தின் ஒருபகுதியாக வங்கியாளர்கள் ஒருங்கிணைந்து ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 6ஆயிரம் வரை ஆடுகள், மாடுகள் மற்றும் சுய தொழில் புரிவோருக்கு பிணையின்றி கடன் வழங்க உத்தரவிட்டார். இதனால், நாடு முழுவதும் லட்சக்கணக்கானஏழை மக்கள் பலனடைந்தனர் என்பது கண்கூடு. இந்நிலை நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முறையான ஆவணங்களை அளித்தும் கடன் பெற முடியாதநிலை மீண்டும் ஏற்பட்டது. இதனால், விவசாயிகள், சிறுதொழில் முனைவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களை நாடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இதன்காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சொத்தை இழந்தவர்கள் ஏராளம்.

  நிதி நிறுவனங்கள்: பல நிதி நிறுவனங்கள் இருசக்கர வாகனங்கள், மினி லாரிகள், வாடகை கார்களை  மொத்த விலையில் 33 சதவீதம் வரை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, வாகனக் கடன்கள் வழங்குகின்றன.

  வண்டியின் ஆவணங்களும் ஒரு சாவியும் நிதி நிறுவனத்தின் வசமே இருக்கும். கடனுக்கான தவணைகளில் இரண்டு தவணை கட்டவில்லை என்றாலே குண்டர்கள் மூலம் வாகனங்களைப் பறிமுதல் செய்துவிடுவர்.

  இன்னும் சில தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் பெற்று, செலுத்தாதவர்களிடம், வீட்டின் விலையை விட குறைந்த விகிதத்தில் மதிப்பீடு செய்து பத்திரப் பதிவு செய்துவிடுவார்கள். இதனால், வீட்டின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு தெரியாமல் தனது வீட்டை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்படும்.

  அரசு எவ்வளவுதான் சட்டம் இயற்றி அமல்படுத்தினாலும், சில அதிகாரிகள் அதை சரிவர நிறைவேற்றாமல் தனியார் நிறுவனங்கள், வங்கி அதிகாரிகளின் கைப்பாவையாக செயல்படுகின்றனர்.

  இதைத் தடுக்கவும் ஏழை-எளியோரைக் கடன் பிரச்னையிலிருந்து காக்கவும் மத்திய-மாநில அரசுகள் உரிய சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்பதே  சமூக ஆர்வலர்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai