சுடச்சுட

  

  தேர்தல் கூட்டணி: தேமுதிக, தமாகா முடிவுக்காக காத்திருக்கிறோம்: இரா.முத்தரசன்

  By திருவாரூர்  |   Published on : 20th March 2016 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக, தமாகா முடிவுக்காக மக்கள் நலக் கூட்டணி காத்திருப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

  திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது:

  தமிழக அமைச்சரவையில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையிலிருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சில அமைச்சர்களின் உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முதல்வர் ஜெயலலிதாவின் நாடகம் என்று பல்வேறு தரப்பினரால் கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்.

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து மிகவும் மோசமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில், உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் சம்பந்தி என்று கடந்த காலங்களில் பேசிவந்த திமுக தலைவர் மு.கருணாநிதி கூட காலம்தாழ்த்தி கண்டன அறிக்கை வெளியிட்டார்.

  திருவள்ளூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். இது கண்டனத்துக்குரியது. காவல் துறையினர் சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக விவசாயிகளையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும் தாக்கி வருகின்றனர்.

  சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெளிவுப்படுத்த வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை. 8 பேர் கொண்ட குழுவினர் குறைந்தப்பட்ச செயல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெறும்.

  தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் பதிலுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் ஆணையம் நல்ல முறையில் செயல்பட்டு வந்தாலும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார் முத்தரசன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai