Enable Javscript for better performance
\\\"ஷேல்\\\' எரிவாயு திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒளிமறைவின்றி நடத்த அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    "ஷேல்' எரிவாயு திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒளிமறைவின்றி நடத்த அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

    By மன்னார்குடி  |   Published on : 20th March 2016 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கடியிலிருந்து "ஷேல்' எரிவாயு எடுப்பதற்கானத் திட்டம் குறித்து, தமிழக அரசு நடத்தும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒளிமறைவின்றி நடத்தவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகி மன்னார்குடி வி.சேதுராமன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    மத்திய அரசு கடந்த 14.10.2013 தேதியிட்ட அரசாணை மூலம் ஷேல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றைத் தேடுதல், கையகப்படுத்துவதற்கான அரசின் கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதன் அடிப்படையில், அரசுப் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி 50 வட்டாரங்களிலும் மற்றொரு பொதுத் துறை நிறுவனமான ஆயில் இண்டியா லிமிடெட்  5 வட்டாரங்களிலும் இந்தப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பட்டியலில் உள்ள 50 வட்டாரங்களில் 9 வட்டாரங்கள் காவிரிப் படுகையில் உள்ளன.

    கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம், ஏற்கனவே கச்சாஎண்ணெய் எடுப்பதற்காக அனுமதி பெறப்பட்ட 5 இடங்களில் ஷேல் எரிவாயு திட்டத்துக்கு அனுமதி கேட்டும், கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு விலக்கு கேட்டும், மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தது. அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சகம், ஜூலை 2015-இல் நடைபெற்ற வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. கூட்டத்தில் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும், ஷேல் திட்டத்துக்கும் கச்சாஎண்ணெய் திட்டத்துக்கும் வேறுபாடு இல்லை என்று ஒஎன்ஜிசி சார்பாக வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்டு கச்சாஎண்ணெய் எடுக்க வழங்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியிலேயே ஷேல் வாயு எடுப்பதற்கும் அனுமதி வழங்கலாம் என்ற பரிந்துரையை வழங்கியது.

    இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், ஒஎன்ஜிசி 25.1.2016-இல் தனது முதலாவது ஆய்வுக் கிணறுக்கான இடமாக நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி பகுதியில் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தது. ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியில் ஷேல் எரிவாயு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று கூறிய வல்லுநர் மதிப்பீட்டுக் குழு, கடந்த பிப்ரவரி 25,26-இல் நடைபெற்ற கூட்டத்தில், தன்னுடைய பழைய முடிவுக்கு நேரெதிராக கச்சாஎண்ணெய் உற்பத்தி முறையும், ஷேல் எரிவாயு எடுக்கும் முறையும் ஒன்றல்ல என்பதை சுட்டிக்காட்டி, திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும், மக்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்றும், திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சீரமைப்பது தொடர்பான பணிகளுக்கு ஏற்படும் செலவுகளையும் திட்ட மதிப்பீட்டோடு இணைத்து கொடுக்கவேண்டும் என்றும் ஒஎன்ஜிசிக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, இந்த திட்டம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒளிமறைவின்றி நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai