அரசின் அலட்சியத்தால் ரயில்வே மேம்பாலம் அமையவில்லை: எம்எல்ஏ குற்றச்சாட்டு
By நீடாமங்கலம் | Published on : 21st March 2016 06:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரசின் அலட்சியத்தால் நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றார் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா.
நீடாமங்கலத்தில் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நீடாமங்கலம் பகுதி மக்களின் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடங்கிக் கிடந்த நீடாமங்கலம்- மன்னார்குடி ரயில் பாதைத் திட்டத்தை எனது தந்தை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது குரல் கொடுத்து கடந்த கால மத்திய ஆட்சியில் திட்டத்தை நிறைவேற்றினார். மன்னார்குடி-சென்னை-எக்ஸ்பிரஸ், மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ், மன்னார்குடி கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ், மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயில், மன்னார்குடி மானாமதுரை பயணிகள் ரயில், மன்னார்குடி- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் போன்றவை நிறைவேற்றப்பட்டு அந்தத் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர்.
நீடாமங்கலம் பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு வகையில் நான் முயற்சி மேற்கொண்டு அந்தத் திட்டத்துக்கான நிதியும் கடந்த கால மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், பணிகளைத் தொடங்குவதில் மாநில அரசு அக்கறை செலுத்தாததால் பணி நிறைவு பெறாமல் உள்ளது.
தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிக்கான மண் ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு நீடாமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும் என்றார் அவர்.