சுடச்சுட

    

    "உயர் பதவியில் இருக்கும் பெண்கள் ஊழலை ஒழிக்கப் பாடுபட வேண்டும்'

    By திருவாரூர்  |   Published on : 21st March 2016 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசின் உயர் பதவியில் இருக்கும் பெண்கள் நாட்டில் ஊழலை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி.

    பாரதி கல்லூரி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், திருவாரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருவாரூர் பாரத் கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் மேலும் அவர் பேசியது:

    பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளை வகித்து நாட்டுக்குப் பெண்கள் பெருமை சேர்த்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று உள்ளாட்சிகளில் பெண்கள் பதவி வகித்து வருகின்றனர். பெண்கள் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு ஊழலை ஒழிக்கப் பாடுபட வேண்டும்.

    நமது நாட்டின் முதல் பெண் ஐ.எப்.எஸ். அதிகாரியாக 1949-ஆம் ஆண்டு சி.பி. முத்தம்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அரசு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், திருமணம் செய்திருந்தால் வேலையை ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற விதி இருந்தது.

    அரசு விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.சு. கிருஷ்ண ஐய்யர் தலைமையிலான ஐவர் அமர்வு விசாரணை செய்து ஐ.எப்.எஸ் பெண் அதிகாரிகள் திருமணம் செய்துக் கொள்ள அரசின் அனுமதி தேவையில்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 1979-ஆம் ஆண்டு வழங்கினர்.

    ஐஏஎஸ் அதிகாரி முத்தம்மா, தான் இறந்த பிறகு தனது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பின் நகலை வழங்க வேண்டுமென்று உயில் எழுதி வைத்திருந்தார். இது தான் பெண் விடுதலை. குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்  சர்.சி.வி. ராமனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கிப் பெருமைச் சேர்த்தார். விழா நிறைவுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு தங்கி விருந்து சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

    குடியரசுத் தலைவரின் அழைப்புக்கு சர்.சி.வி. ராமன் எனக்கு நாளை மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வுக் கட்டுரை வாய்மொழித் தேர்வுக்கு தேதி குறித்துவிட்டேன் அதை தள்ளிப்போட முடியாது என குடியரசுத் தலைவரின் விருந்தோம்பலை நிராகரித்து மாணவர்களின் நலனுக்காக சென்னைத் திரும்பினார். மாணவர்கள், ஆசிரியர்கள் மதிப்புமிக்க உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்றார் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி.

    பாரத் கல்வி நிறுவனங்களின் செயலர் ரெ. காலைக்கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நீதிபதி கோகுல கிருஷ்ணன், குற்றவியல் சார்பு நீதிபதி கவிதா, சார்பு நீதிபதி ஜி. அனுராதா, கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், வழக்குரைஞர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, வழக்குரைஞர் மணிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கல்லூரியில் சிறந்து விளங்கிய கல்வியியல் கல்லூரி மாணவி ஆ. சூர்யா, கேட்டரிங் கல்லூரி மாணவி சு. ராஜேஸ்வரி ஆகியோருக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai